“தியாகம்” சிறுகதை
கோபாலன் தனியார் வங்கியில் நல்ல வேலையில் இருந்தான். தம்பி சுனில் மரவேலை செய்து வந்தான். இருவரும் வசதியாக வாழும் அளவுக்குச் சம்பாதித்தாலும், அவர்களுடைய வாழ்க்கைக்குப் பின்னால் ஒரு தாயின் கண்ணீரும் வியர்வையும் ரத்தமும் கலந்திருந்தன.
கணவன் தினமும் குடித்துவிட்டு அடிப்பதும், கொடுமைப்படுத்துவதுமாக இருந்ததால், தாங்க முடியாமல் தன்னுடைய மூத்த மகன் கோபாலனைத் தூக்கிக்கொண்டு தாய் சரசு பிறந்த வீட்டுக்கு வந்தாள். அப்போது அவள் வயிற்றில் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தான் சுனில்.
மகன் பிறந்த பிறகுகூட அவனுடைய முகத்தைப் பார்க்க வராத கணவன், “என்னைப் பிடித்த பீடை ஒழிந்துவிட்டது!” என்று சொல்லிவிட்டு வேறொரு திருமணம் செய்துகொண்டான்.
இரண்டு பிள்ளைகளுடன் நிற்கதியாக நின்ற சரசுவுக்கு ஆதரவாக இருந்தது அவளுடைய தங்கை தங்கம் மட்டுமே. தன்னுடைய அக்காவின் குழந்தைகளைத் தன்னுடைய குழந்தைகளைப் போலவே பார்த்துக்கொண்டாள்.
குழந்தைகள் வளரத் தொடங்கியதும், சரசு அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிடுவாள். அருகிலிருந்த தேநீர்க் கடைகளுக்குக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொடுப்பாள். கடைகளைப் பெருக்கித் துடைப்பாள். வீட்டு வேலை செய்வாள். உணவகங்களில் பாத்திரங்களையும் கழுவுவாள்.
வெயிலிலும் மழையிலும் அவள் உழைத்த ஒவ்வொரு நாளும், மகன்களின் எதிர்காலத்திற்காக ஒரு கனவைச் சுமந்தது.
காலில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும். வலியைப் பொறுத்துக்கொண்டு வேலைக்குச் செல்வாள். இரவு வீட்டுக்கு வந்ததும் மகன்களுக்குச் சாப்பாடு கொடுத்துவிட்டு, அவர்கள் தூங்கிய பிறகுதான் தன் பசியைப் பற்றியே நினைப்பாள்.
அவளுடைய தங்கை தங்கம், அவ்வப்போது வந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்வாள். அக்காவின் சுமையைக் குறைக்கத் தன்னால் முடிந்த உதவிகளையும் செய்வாள்.
கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்த பணத்தில் ஒரு சிறிய இடத்தை வாங்கி, அதில் வீட்டையும் கட்டினாள் சரசு. அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லிலும் அவளுடைய உழைப்பு இருந்தது.
காலங்கள் கடந்தன. கோபாலன் படித்து முடித்துவிட்டு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தான். சுனில் படிப்பில் அதிக ஆர்வம் காட்டாததால், மரவேலை கற்றுக்கொண்டு பிழைக்கத் தொடங்கினான்.
ஒருநாள் தங்கம், கோபாலனிடம், “டேய், உனக்குப் பொண்ணு பார்க்கலாமா? உனக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டாள்.
“எனக்கு எந்த மாதிரி பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை சித்தி. என் அம்மாவைக் கடைசிவரை நல்லா பார்த்துக்கணும். என் அம்மா என்னைவிட்டுப் பிரியக் கூடாது. அவங்கதான் எனக்கு எல்லாமே!” என்றான் கோபாலன்.
அதைக் கேட்ட தங்கத்தின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
“என் அக்காவுக்கு இதைவிடப் பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கு? என்னோட அக்காவோட கஷ்டத்தை புரிந்து கொண்ட பிள்ளைகள் கிடைச்சிருக்காங்க.” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
கோபாலனுக்குப் பிடித்த பெண்ணையே பார்த்துத் திருமணம் செய்துவைத்தார்கள். படித்த அழகான பெண் அவள்.
திருமணத்திற்கு முன்பு, “என் அம்மாதான் என் உலகம்!” என்று சொன்ன கோபாலன், திருமணத்திற்குப் பிறகு மனைவியின் பேச்சுக்கேற்ப மாறத் தொடங்கினான்.
முன்பெல்லாம் அம்மாவின் காலில் மருந்து தடவியவன், இப்போது அவளுக்கு உணவு கொடுப்பதையே கடமையாக நினைத்தான்.
சரசு எதையும் கேட்கவில்லை. மகனின் மாற்றத்தை உணர்ந்தாலும், அவன் மனம் மாறிவிடும் என்று நம்பினாள்.
சில மாதங்களுக்கு பிறகு இளைய மகன் சுனிலுக்கும் திருமணமானது.
ஒருநாள் கோபாலன் தன்னுடைய மனைவியிடம், “என்னால இனிமேல் அம்மாவைப் பார்த்துக்க முடியாது. அவங்க சுனில் கூட இருக்கட்டும். உனக்கு வேலைக்குப் போகவே நேரம் சரியா இருக்கு. இதுல அம்மாவை வேற எப்படிப் பார்த்துக்க முடியும்? அது மட்டும் இல்ல அம்மாவுக்கு நான் மட்டும்தான் புள்ளையா? ” என்றான்.
அந்த வார்த்தைகள் சரசுவின் காதுகளில் விழுந்தபோது, அவளுடைய இதயமே நொறுங்கியது.
தன்னுடைய பிள்ளைகளுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவள், இப்போது அவர்களுக்கே பாரமாகிவிட்டோமே என்று மனதுக்குள் அழுதாள்.
இதை அறிந்து அங்கே வந்த சுனில், “அம்மா, நீ எங்கேயும் போக வேண்டாம். என் வீட்டிலேயே என்னோட இரு!” என்று அவளுடைய கையைப் பிடித்தான்.
சுனிலின் வீட்டில் சரசுவுக்குத் தனி அறை அமைத்துக் கொடுத்தான். அவளுக்கு உடல்நிலை சரியில்லாத நாட்களில் இரவு முழுவதும் கண்விழித்துப் பார்த்துக்கொண்டான். அவனுடைய மனைவியும் அவ்வப்போது முகம் சுளித்தாலும் சுனில் அவனுடைய அம்மாவை மனைவியிடத்தில் விட்டுக் கொடுக்க மாட்டான் கண்டிப்புடன் எனது அம்மாவை பார்த்துக் கொள்வது உன்னுடைய கடமை என அவளிடம் கூறினான். மேலும் தன் கணவன் தாயிடம் காட்டும் அன்பைப் பார்த்து அவளும் மாமியாரை அன்புடன் கவனித்துக்கொண்டாள்.
சரசு அங்கே நிம்மதியாக வாழத் தொடங்கினாள்.
ஒருநாள் கோபாலனின் வீட்டுக்கு வந்த தங்கம், அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“டேய் கோபாலா, கல்யாணத்துக்கு முன்னாடி உன் அம்மாதான் உலகம்னு சொன்னியே! இப்போ என்னடான்னா, என்னால பார்த்துக்க முடியாதுன்னு சொல்ற?”
“சித்தி, கல்யாணத்துக்கு முன்னாடி அப்படித்தான் நினைச்சேன். ஆனா, இப்போ குடும்பத்தைப் பார்த்துக்க வேண்டியிருக்கு!” என்றான் அவன்.
தங்கத்தின் முகம் கோபத்தில் சிவந்தது.
“உனக்கு ஒரு குடும்பம் இருக்குன்னா,….? அப்போ உன்னைப் பெத்தவ உன் குடும்பம் இல்லையா? உன் அம்மா உன்னையும் உன் தம்பியையும் தூக்கிக்கிட்டு வந்தப்போ, அவ வயசு வெறும் இருபத்தைஞ்சு! எத்தனை நாள் பசியோட கிடந்திருப்பா? எத்தனை நாள் வலியைப் பொறுத்திருப்பா? உன்னையும் உன் தம்பியையும் ஆளாக்கத் தன்னோட வாழ்க்கையையே தொலைச்சவ!.. அவளோட ஒத்த வயசு உடைய பிள்ளைங்க எல்லாம் புருஷன் குடும்பம்னு சந்தோசமா வாழ்ந்தப்போ அவளோட சந்தோசமே நீங்கதான்னு வாழ்ந்து உழைச்சு தேஞ்சு போனவ அவ…
“அவ கால்ல ரத்தம் கசியும்போதுகூட உங்களுக்காக உழைச்சவ. அவ சம்பாதிச்ச ஒவ்வொரு காசுலயும் உங்க எதிர்காலம் இருந்தது. இன்னைக்கு நீ இருக்கிற வீடும், நீ அனுபவிக்கிற வசதியும் அவ உழைச்சு சேர்த்ததுதான்!
“உன் மனைவியோட சேர்ந்து வாழ வேண்டியது தப்பில்லை. ஆனா, அதுக்காக உன்னைப் பெத்தவளை மறந்துடலாமா? உன் மனைவிக்கு ஏதாவது மனக்குறை இருந்தா, அவளுக்குப் புரியவைக்க வேண்டியது உன் பொறுப்பு. அம்மாவைக் கைவிடுறது அதுக்குத் தீர்வில்லை!
“உன் அம்மாவை உன் தம்பி தங்கத் தட்டுல வச்சுத் தாலாட்டுறான். அவன் உன்னைவிடப் பெரிய படிப்பு படிக்கலை. ஆனா, அம்மாவோட அருமையை நல்லா படிச்சிருக்கான்!
“நீயும் ஒரு நாள் அப்பாவாகப் போறவன். உன் பிள்ளை நாளைக்கு உன்னை இப்படிப் பார்த்துக்கிட்டா உனக்கு எப்படி இருக்கும்? ஒரு நிமிஷம் உன்னை அந்த இடத்துல வச்சு யோசிச்சுப் பாரு!”
என்று சொல்லிவிட்டு, தன் அக்கா சரசுவைப் பார்க்கக் கிளம்பினாள் தங்கம்.
அவளுடைய வார்த்தைகள் கோபாலனின் மனதைத் துளைத்தன. தான் செய்த தவறின் ஆழம் அவனுக்குப் புரிந்தது.
ஆனால், தாயின் அன்பைத் தேவைப்பட்டபோது மட்டும் நினைத்துக்கொண்டு, அவளுக்குத் தேவையான நேரத்தில் கைவிட்டுவிட்டான் அல்லவா?
அன்று முதல் சரசு தன் மூத்த மகனைப் பார்க்கவே விரும்பவில்லை. அவளுடைய மனத்தில் இருந்த காயம் அவ்வளவு எளிதில் ஆறவில்லை.
சுனிலின் வீட்டில் அவள் நிம்மதியாக வாழ்ந்தாள். தன் இளைய மகனின் அன்பில் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் கண்டாள்.
ஒரு தாய் தன் பிள்ளைகளுக்காகத் தன் வாழ்க்கையையே தியாகம் செய்கிறாள். ஆனால், அவளுக்குத் தேவைப்படுவது அவர்கள் சம்பாதிக்கும் பணமல்ல; வயதான காலத்தில் தன்னை மறக்காமல் பார்த்துக்கொள்ளும் அன்பும் மரியாதையும்தான்.
அம்மா உயிரோடு இருக்கும்போதே அவளுடைய அருமையை உணருங்கள். அவள் போன பிறகு வருந்துவதால், அவள் சிந்திய கண்ணீரை மீண்டும் துடைக்க முடியாது!